மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவை வந்த பெண் டாக்டரை வீட்டில் தங்க வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்த திரண்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர்

மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவை வந்த பெண் டாக்டரை வீட்டில் தங்கவைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பேராட்டம் நடத்த திரண்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

Update: 2020-05-20 23:34 GMT
கோவை,

கோவை பீளமேடு அருகே உள்ள துக்ளக் வெங்கடசாமி வீதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் நேச்சுரோபதியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக புனேயிலேயே தவித்து வந்தார்.

இந்தநிலையில் பின்னர் சொந்த ஊர் செல்வதற்காக அவர் புனேயில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தது.

பொதுமக்கள் எதிர்ப்பு

அதன்பின்னர் அவர் கார் மூலம் நேற்று முன்தினம் கோவை திரும்பினார். மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்ததால் மீண்டும் அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தது. இதையடுத்து அந்தபெண் டாக்டர் தனது வீட்டுக்கு சென்றார். அவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று அச்சம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பெண் டாக்டர் அவருடைய வீட்டில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. அத்துடன் பயிற்சி டாக்டரை 14 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்