நாகர்கோவிலில் கொரோனா விதிமுறையை மீறிய டீக்கடைக்கு ‘சீல்’ வைப்பு முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறையை மீறிய டீக்கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2020-05-21 01:37 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறையை மீறிய டீக்கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

டீக்கடைகள் திறக்க அனுமதி

கொரோனா பரவலை தடுக்க 4-வது கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது 3-வது கட்ட ஊரடங்கின் இறுதியில் சில தளர்வுகள் செய்யப்பட்டு தனிக்கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஆணையர் சரவணக்குமார் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டினர்.

‘சீல்‘ வைப்பு

அப்போது செட்டிகுளம் சந்திப்பில் இருந்து ராமன்புதூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் சிலர் அமர்ந்து டீக்குடித்து கொண்டிருந்தனர். அந்த கடையில் சோதனை நடத்திய ஆணையர் மற்றும் நகர்நல அதிகாரி கிங்சால் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததற்காக கடையை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். அந்த கடையில் சிவப்பு வண்ண ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது. இதே கடையில் வாடிக்கையாளர்களை அமர வைத்து டீ வழங்கியதற்காக காலையில் தான் அப்பகுதி சுகாதார ஆய்வாளர் ரூ.200 அபராதம் விதித்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் உள்ள டீக்கடையில் பிளாஸ்டிக் கப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு டீ வழங்கியதற்காக அதிகாரிகள் ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

ரூ.66 ஆயிரம் அபராதம்

மேலும், போலீசார் ஹெல்மெட் சோதனை நடத்துவதை போன்று நேற்று மாநகராட்சி பகுதி முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் முக்கிய சாலைகளில் நின்று முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கும், கடைகளில் முக கவசம் அணியாமல் பணியில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வகையில் சிறிய கடைகளுக்கு ரூ.200-ம், பெரிய கடைகளுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியில் இதுவரை முக கவசம் அணியாத பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரமும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 700-ம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர நகர்நல அதிகாரி கிங்சால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்