காமராஜர் சிலையை அவமதித்த வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுகனேஸ்வரன் (வயது 27), அரவிந்த் (22), வெற்றிவேல் (26).

Update: 2020-05-21 02:15 GMT
சேலம், 

தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறாமல் நின்றதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் காரணம் எனக்கூறி இவர்கள் 3 பேரும் கடந்த 7-ந் தேதி அந்த பகுதியில் இருந்த காமராஜர் சிலையை அவமதித்தனர். 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காமராஜர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சுகனேஸ்வரன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

போலீசார் விசாரணையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2015ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை தாக்கியது தொடர்பான வழக்கு சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து சுகனேஸ்வரன், அரவிந்த், வெற்றிவேல் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்