கேரளாவில் இருந்து தேவாரத்துக்கு யானைகள் உலா வரும் காட்டுப்பாதையில் நடந்து வந்த நாமக்கல் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

கேரளாவில் இருந்து தேவாரத்துக்கு யானைகள் உலா வரும் காட்டுப்பாதையில் நடந்து வந்த நாமக்கல்லை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2020-05-21 02:34 GMT
தேனி, 

கேரள மாநிலத்தில் உள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் தேனி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி அவர்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களில் 7 பெண்கள் உள்பட 13 பேர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் கோட்டயத்தில் இருந்து நெடுங்கண்டத்துக்கு நடந்து வந்துள்ளனர். நெடுங்கண்டத்தில் இருந்து சாக்குலூத்து மெட்டு மலைப்பகுதி வழியாக தேவாரத்துக்கு நடந்து வந்தனர்.

யானைகள் உலாவும் காடு

சுமார் 80 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த தேவாரத்துக்கு நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தனர். அவர்கள் நடந்து வந்த சாக்குலூத்து மலைப்பகுதியானது யானைகள் உலா வரும் கரடு முரடானது. அந்த பகுதியில் யானைகள் உலா வருகின்றன. அதிலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை பறித்த ஒற்றை காட்டு யானையும் இந்த காட்டுக்குள் உலா வருகின்றன. இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு கூட அச்சப்படுவார்கள்.

சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஆபத்தான காட்டுப்பாதையில் உயிரை பணயம் வைத்து நடந்து வந்துள்ளனர். ஆனால், தேவாரம் வந்த நிலையில், அங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வழியின்றி பரிதவிப்புடன் நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.

சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

13 தொழிலாளர்களையும் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களின் நிலையை உணர்ந்த கலெக்டர், தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் 13 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்