மணப்பாறை அருகே குழந்தையின் தொடையில் 2 மாதங்களாக சிக்கியிருந்த ஊசி அரசு மருத்துவமனை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க மனு

மணப்பாறை அருகே குழந்தையின் தொடையில் 2½ மாதங்களாக ஊசி சிக்கி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-05-21 04:10 GMT
மணப்பாறை, 

மணப்பாறை அருகே குழந்தையின் தொடையில் 2½ மாதங்களாக ஊசி சிக்கி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு தடுப்பூசி போட்ட செலிவியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்தது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரை சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது 23). பட்டதாரியான இவருக்கும், கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள தெலுங்கப்பட்டியை சேர்ந்த பிச்சாண்டவர்(33) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கர்ப்பிணியான தாமரைச்செல்விக்கு கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையும், தாயும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இந்தநிலையில், குழந்தை பிறந்த மறுநாள் (மார்ச் 10-ந் தேதி) குழந்தையின் தொடையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோடு தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால், மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 முறை குழந்தையை தூக்கிச் சென்று தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம் இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ ஊழியர்கள் வீக்கம் உள்ள இடத்தில் ஐஸ்கட்டி வையுங்கள் சரியாகி விடும் என்று கூறி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 45 நாட்களுக்கு பின்னர் அந்த குழந்தைக்கு மற்றொரு தொடையில் 2-வது தடுப்பூசி போடப்பட்டது. இதனால், அந்த குழந்தை மேலும் அழுது கொண்டே இருந்தது.

தொடையில் சிக்கியிருந்த ஊசி

இதனால், செய்வதறியாது திகைத்த பெற்றோர், முதல் தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் இருந்த வீக்கத்தை அழுத்தி பார்த்தனர். அப்போது ஊசி போன்று ஏதோ தென்படுவது தெரியவந்தது. பின்னர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த ஊசியை வெளியே எடுத்த பெற்றோர், அதை ஒரு டப்பாவில் வைத்து குழந்தையையும் தூக்கிக் கொண்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவ அதிகாரி வில்லியம் ஆண்ட்ரூசிடம் இதுபற்றி முறையிட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், குழந்தைக்கு தடுப்பூசி போட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மணப்பாறை மருத்துவ அதிகாரியிடம் பெற்றோர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் தொடையில் 2½ மாதங்களாக தடுப்பூசி சிக்கியிருந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்