காஜாபேட்டை அருகே தகராறு: கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

திருச்சியில் காஜா பேட்டை அருகே ஏற்பட்ட தகராறின்போது, கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி இறந்ததால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-05-21 04:27 GMT
திருச்சி, 

திருச்சியில் காஜா பேட்டை அருகே ஏற்பட்ட தகராறின்போது, கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி இறந்ததால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கத்திக்குத்து

திருச்சி பாலக்கரை மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி கருப்பு (வயது 40). கூலித் தொழிலாளி. இவர், தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் இவர் மணல்வாரி துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்க சென்றார். அப்போது அவருக்கும், காஜாபேட்டையை சேர்ந்த முஸ்தபா (43), காஜா மொய்தீன் (55) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கிலி கருப்பு, காஜாபேட்டை வேம்படி மாரியம்மன்கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முஸ்தபாவும், காஜாமொய்தீனும் சேர்ந்து சங்கிலி கருப்புவை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இதுபற்றி பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இரவோடு, இரவாக முஸ்தபாவையும், காஜாமொய்தீனையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சங்கிலி கருப்பு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையொட்டி இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணல் கடத்தல்

* திருவெறும்பூர் அருகே உள்ள நடராசபுரம் கிராமத்தை அடுத்த காவிரிகரையையொட்டிய குளுமிக்கரை பகுதியில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் மணல் கடத்தி வந்த தியாகராஜன்( 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் பழைய கரூர் ரோடு அருகே கடந்த 2 நாட்களாக ஒரு கார் கேட்பாரற்று நின்று கொண்டு இருந்தது. வெளியூர் பதிவு எண் கொண்ட அந்த காரை, கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பழக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்

* திருச்சி இ.பி.ரோடு ஜான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சித்திரவேல் (44). இவர், திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மைத்துனர் வாங்கிய கடனை தருமாறு சித்திரவேலை அதே பகுதியை சேர்ந்தவர்கள் மிரட்டினர். இதுகுறித்து, வக்கீல் ஒருவர் மூலம் சித்திரவேல் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் சித்திரவேல் கடைக்கு சென்ற சிலர், தண்ணீர் பாட்டிலால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும், சித்திரவேலின் மாமனார் பழனிச்சாமியின் கடைக்கும் சென்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், செல்வகுமார் (38), பெருமாள் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

கஞ்சா வியாபாரி போலீசில் சரண்

* திருச்சி அருகே உள்ள கரைமேடு பகுதியை சேர்ந்தவர் கமல் (35). இவர் மீது எடமலைப்பட்டி புதூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளன. அவரை பிடிப்பதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் கமல் நேற்று மதியம் ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* திருச்சி இ.பி.ரோடு, கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியதாக அதே பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் (32) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

பிணமாக கிடந்த முதியவர்

* திருச்சி மாவட்டம் வீரப்பூரில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். மணப்பாறை போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் இறந்தவர் பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்