தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கு சத்து மாத்திரை வினியோகம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கு சத்து மாத்திரை வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2020-05-21 23:00 GMT
தூத்துக்குடி,

தூததுக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரை (ஆர்சனிக் ஆல்பம் 30) வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, அலுவலர்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் கூறும்போது, ‘தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30, யோகா மற்றும் இயற்கை மருந்தகம் சார்பில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டது. இந்த மருந்தானது அனைத்து தூய்மை பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பணியாளர்கள், போலீசார், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நபர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது’ என்றார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, டாக்டர்கள் ரவீந்திரன், சேவியர், சங்கர்ராமசுப்பிரமணியன், ரதிசெல்வம், லதா, லட்சுமிகாந்த், பிரேமலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்