ஆட்டோ டிரைவர்கள் நிவாரண தொகை பெறுவதற்கு பான் எண், தகுதி சான்று கட்டாயம் இல்லை துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல்

ஆட்டோ டிரைவர்கள் நிவாரணம் தொகை பெற பான் எண், தகுதி சான்று கட்டாயம் இல்லை என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியுள்ளார்.

Update: 2020-05-21 22:15 GMT
பெங்களூரு,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்குவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். ஆனால் அதற்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துறை கமிஷனர் சிவக்குமார், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஆட்டோ டிரைவர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் லட்சுமண் சவதி பேசும்போது கூறியதாவது:-

ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டுள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தலா ரூ.5,000 நிவாரணத்தை அறிவித்துள்ளார். சேவாசிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு பான் கார்டு மற்றும் வாகன தகுதி சான்றிதழ் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்டோ, கார் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த சான்றிதழ்களை தங்களால் வழங்க இயலாது என்று கூறுகிறார்கள். அதனால் அந்த சான்றுகளும் கட்டாயம் இல்லை.

தகுதியான அனைத்து ஆட்டோ, கார் டிரைவர்களுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரணம் கிடைக்கும். யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. சேவாசிந்து இணையதளம் மூலம் விண்ணப்பித்து நிவாரண உதவியை பெறலாம்.”

இவ்வாறு லட்சுமண் சவதி பேசினார்.

மேலும் செய்திகள்