வருகிற 1-ந் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேட்டி

வருகிற 1-ந் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கூறினார்.

Update: 2020-05-21 23:39 GMT
கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினார்கள். அதன்பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

பேட்டி

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம், அனைத்து ஆட்டோ கூட்டுக்கமிட்டித் தலைவர் பி.கே.சுகுமாரன், செயலாளர் வணங்காமுடி உள்ளிட்ட சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., எம்.எல்.எப்., எஸ்.டி.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசின் அறிவிப்பை ஏற்று கடந்த 52 நாட்களாக ஆட்டோக்களை அவர்கள் இயக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால், ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. அரசு அமைத்த 52 தொழில் நலவாரியங்களில் முக்கியமாக ஆட்டோ, கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் இந்த தொழிலாளர்களின் பணம் உள்ளது.

இந்த நலவாரியத்தின் மூலம் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. இந்த டிரைவர்களின் பணம் தான் நலவாரியத்தில் உள்ளது. மேலும், ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்ட நிலையிலும் ஆட்டோக்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

1-ந் தேதி முதல் இயக்க அனுமதிக்க வேண்டும்

இந்த நிலையில் பல்வேறு வங்கிகள் ஆட்டோ டிரைவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நெருக்கடியை கொடுக்கின்றனர்.

நாளையே ஆட்டோக்களை ஓட்டுங்கள் என்று அரசு கூறினாலும், உடனே இயக்க முடியாது. இரண்டு மாதங்களாக நின்று கொண்டிருக்கும் ஆட்டோக்களை ஒர்க்‌ஷாப்புக்கு கொண்டு சென்று செலவு செய்தால்தான் இயக்க முடியும்.

எனவே அரசுக்கு ஆட்டோ டிரைவர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்தபடி ஆட்டோ டிரைவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை கொடுக்க வேண்டும். இதேபோல் வருகிற 1-ந் தேதி முதல் ஆட்டோக்களை இயக்க தமிழக முதல்-அமைச்சர் அனுமதியளிக்க வேண்டும். இல்லையென்றால் நெருக்கடியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் போலீசாரின் கெடுபிடிகளை எல்லாம் தாண்டி ஆட்டோக்களை இயக்குவார்கள்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்த காலத்தில் அவசர தேவைக்காக ஒன்றிரண்டு ஆட்டோக்கள் தவிர்க்க முடியாமல் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பிடித்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் போலீசார் விதித்திருப்பது ஒரு போதும் ஏற்கமுடியாது.

உடனடியாக அந்த வழக்குளை திரும்பபெறுவதோடு, ஆட்டோக்களை டிரைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே கடும் நெருக்கடியில் ஆட்டோ டிரைவர்கள் உள்ள நிலையில் அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்குவது அரசு நிர்வாகத்திற்கு தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ராம துரைமுருகனை கோவை எம்.பி. தலைமையில் சந்தித்து கோரிக்கை மனுக்களை ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அளித்தனர்.

மேலும் செய்திகள்