ஊரடங்கு தொடரும் நிலையில், புதுச்சேரியில் மதுக்கடை திறப்பதில் தொடர்ந்து இழுபறி

ஊரடங்கு தொடரும் நிலையில் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மாநில அரசின் கோப்பை கவர்னர் கிரண்பெடி மீண்டும் திருப்பி அனுப்பினார்

Update: 2020-05-21 23:55 GMT
புதுச்சேரி, 

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

இதையொட்டி மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. புதுவை மாநிலத்திலும் மதுக்கடைகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது கடைகள், ஓட்டல்கள் திறப்பு, உள்ளூரில் பஸ்களை இயக்குவது உள்ளிட்ட பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது 4-ம் கட்டமாக வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி புதுவையிலும் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக முடிவு செய்ய கடந்த 18-ந் தேதி புதுவையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் 20-ந் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோவிட் வரி விதிக்கப்படாததால் அதை கவர்னர் திருப்பி அனுப்பினார்.

உடனே அன்று இரவே மீண்டும் அமைச்சரவையை கூட்டி மது பானங்களுக்கு 50 சதவீதம் கோவிட் வரி விதித்து மீண்டும் ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகைக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி, காரைக்காலில் மதுபானங்களுக்கு கோவிட் வரியை 100 சதவீதமும், மாகியில் 150 சதவீதமும், ஏனாமில் 200 சதவீதமும் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி ஒப்புதல் தர மறுத்து கோப்பை தலைமை செயலகத்துக்கே திருப்பி அனுப்பினார். அதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி கோவிட் வரியை முன்பை விட உயர்த்தி மீண்டும் கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பினர். இந்தமுறை மதுக்கடைகளை திறக்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்து விடுவார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் ஏற்கனவே தெரிவித்தபடி மதுபானங்களுக்கு வரி விதிக்கப்படாததால் அந்த கோப்பை மீண்டும் அவர் திருப்பி அனுப்பினார். கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து புதுவை சட்ட சபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மதுக்கடைகள் திறப்பு குறித்து நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள்.

அதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னரின் அறிவுறுத்தலின்படி மதுபானங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட சதவீதத்தை விட கோவிட் வரி கூடுதலாக விதித்து அமைச்சரவையில் முடிவு செய்து கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பெடி தான் அறிவுறுத்தியபடி மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் கோப்பை திருப்பி அனுப்பினார்.

அதையடுத்து நான் கவர்னரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது நான் அவரிடம், புதுவை மாநிலத்தில் கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மதுபிரியர்களால் அதிக பணம்கொடுத்து வாங்க முடியாது. எனவே மதுபானங்களுக்கான வரியை குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றேன்.

ஆனால் அவர், தமிழகத்திற்கு இணையாக புதுவையில் மதுபானங்களின் விலையை கண்டிப்பாக உயர்த்த வேண்டும். புதுவையில் குறைந்த விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் மதுகுடிப் பதற்காக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் புதுவைக்கு வர வாய்ப்புள்ளது. அவர்கள் மூலமாக கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. புதுவை மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். எனவே கோவிட் வரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என தெரிவித்து விட்டார். அடுத்தகட்டமாக இதுகுறித்து விரைவில் அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்