கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அதிகாரிகளுடன் ஆய்வு அடுத்த 2 மாதங்கள் கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உத்தரவு

மாநில அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

Update: 2020-05-22 00:08 GMT
மும்பை,

மாநில அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அடுத்த 2 மாதங்கள் தொற்று நோயை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மாநில அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆய்வு கூட்டம் நடத்தினார். ராஜ் பவனில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில தலைமை செயலாளர் அஜாய் மேத்தா, மாநில போலீஸ் டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால், மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால், கூடுதல் தலைமை செயலாளர்கள் சீத்தாரம் குந்தே, நிதின் கரீர், மனோஜ் சவுனிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனாவை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதிகள், டாக்டர்கள், ஊழியர்கள், படுக்கைகளுடன் தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தாராவி போன்ற கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கவர்னர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல தற்போது மாநிலத்தில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கை, டாக்டர்கள், நர்ஸ், மருத்துவ பணியாளர்கள் விவரங்களை கவர்னர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதேபோல மாநில சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் வியாஸ், மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் ஆகியோர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கவர்னரிடம் கூறினர்.

இதையடுத்து கவர்னர் கொரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடி வரும் துப்புரவு பணியாளர்கள், போலீசார், சுகாதாரப்பணியாளர்கள், வார்டு பாய் போன்றவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுதவிர புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாம்களின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் செய்திகள்