வெளிநாடுகளுக்கு பின்னலாடைகளை அனுப்ப விமான கட்டணம் பல மடங்கு உயர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை

வெளிநாடுகளுக்கு பின்னலாடைகளை அனுப்ப விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2020-05-22 00:33 GMT
திருப்பூர், 

திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் உள்ள வர்த்தகர்கள் கொடுக்கும் ஆர்டர்களின்படி ஏற்றுமதியாளர்கள் ஆடைகளை தயாரித்து சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு சரக்கு லாரிகளில் கொண்டு செல்கிறாார்கள்.

அங்கிருந்து கப்பல்கள் மூலமாக பல்வேறு நாடுகளுக்கு ஆடைகள் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோல் விரைவு ஆர்டர்களை விமானங்களிலும் ஏற்றுமதியாளர்கள் அனுப்பி வருகிறார்கள். தற்போது ஒரு சில விமானங்களில் கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்காக சிறப்பு சரக்கு விமானம் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீசன்

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:-

கொரோனாவின் தாக்கம் உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒரு சில நாடுகளில் பாதிப்பு குறைந்துள்ளது. திருப்பூரிலும் நிறுவனங்கள் தற்போது குறைந்தபட்ச தொழிலாளர்களை வைத்து இயங்க தொடங்கியுள்ளன. தற்போது பாதிப்பில் இருந்து மீண்ட வெளிநாடுகள் மீண்டும் ஆடை வர்த்தகத்தை தொடங்கும் நிலையில் உள்ளன. இதனால் எங்களை தொடர்புகொண்டு வருகிறார்கள்.

தற்போது அங்குள்ள சீசன்களுக்கு ஏற்ற வகையில், ஆடை தயாரித்து அனுப்ப முடியாத நிலையில் இருந்தோம். இதற்கிடையே ஒரு சில நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கப்பல்களில் சரக்குகளை அனுப்பினாலும் அந்த ஆடைகள் சென்று சேருவதற்குள் சீசன் முடிவடைந்து விடும்.

சிறப்பு சரக்கு விமானம்

இதன் காரணமாக விமானங்களில் சரக்குகளை விரைவாக அனுப்புமாறு வெளிநாட்டு வர்த்தகர்கள் கேட்டு வருகிறார்கள். அதன்படி விமானங்களில் பின்னலாடை சரக்குகளை அனுப்ப பதிவு செய்தால், கடந்த காலங்களில் ஒரு கிலோ ஆடையை அனுப்ப ரூ.85 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது பல மடங்கு இந்த கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.400 முதல் ரூ.900 வரை ஒரு கிலோ ஆடைக்கு கட்டணமாக உயர்த்தி வசூலிக்கிறார்கள். இதனால் கவலையில் உள்ளோம்.ஏற்கனவே கொரோனா பாதிப்பு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு எங்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. காலதாமதமாக ஆடைகளை அனுப்புவதால் ஏற்கனவே நிர்ணயித்த விலையை விட வர்த்தகர்கள் சீசன் முடிவடைந்த காரணத்தை காட்டி குறைவாக தான் வழங்குவதாக தெரிவிக்கிறார்கள். இருப்பினும் நிதி நெருக்கடியை சமாளிக்க இதற்கு ஒப்புக்கொண்டு ஆடைகளை அனுப்புகிறோம். இந்த கட்டண உயர்வு எங்களை நஷ்டம் ஏற்படும் நிலைக்கு கொண்டுவிடும். எனவே தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப சிறப்பு சரக்கு விமானங்களை குறைவான கட்டணத்தில் மத்திய அரசு இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்