எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த தயார்படுத்தப்படும் பள்ளிகள்

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த பள்ளிகள் தயார்படுத்தப்படுகின்றன.

Update: 2020-05-22 01:25 GMT
தர்மபுரி, 

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வை சமூக இடைவெளியை கடைபிடித்தும், நோய் தொற்று பரவாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி உரிய விதிமுறைகளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 11,856 மாணவர்கள், 10,936 மாணவிகள், 562 தனித்தேர்வர்கள் என மொத்தம் 23,354 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 216 அரசு பள்ளிகள், 74 மெட்ரிக் பள்ளிகள், 16 சுய நிதி பள்ளிகள், 6 நிதியுதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 4 பழங்குடியினர் நல பள்ளிகள், 1 சமூக நலத்துறை பள்ளி என மொத்தம் 318 பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளில் சமூக இடைவெளியுடன் பல்வேறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். தேர்வு தொடர்பான பணியில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தவும் வாய்ப்பு உள்ளது. அரசு வழங்கும் ஆலோசனைகளின்படி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்