சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி வட மாநில தொழிலாளர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-22 01:42 GMT
பல்லடம், 

பல்லடத்தில் முக்கிய தொழில்களாக விசைத்தறி, கோழிப் பண்ணை, பனியன் தொழில், அரிசி ஆலை என ஏராளமான வேலைகள் கொட்டிக்கிடக்கிறது. இவற்றில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமன்றி, வடமாநில தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் வாழ்க்கை முடங்கிப்போனது. வேலையும் இல்லாமல், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

போதிய வருமானம் இல்லாததால் உணவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் அடிக்கடி ரோட்டுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. இந்த நிலையில், சிறப்பு ரெயில் மூலம் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

முற்றுகை

அவ்வாறு சிறப்பு ரெயிலில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே செல்ல முடியும் என்பதால், ஆன்லைன் பதிவின் அடிப்படையில், தொழிலாளர் கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு, அதற்கான குறுந்தகவல்கள் செல்போனுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அவர்களின விவரம் சரி பார்க்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஜார்கண்ட், பீகார் மாநிலங்களை சேர்ந்த 250 தொழிலாளர்கள் வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். துணி பைகளுடன் வந்த அவர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில் பாஸ் வழங்க வேண்டும் என்று கோஷம்போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது பற்றிய தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் பல்லடம் வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பரமேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மொழி புரியாததால் அவர்களிடம் விளக்கி சொல்வதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகி விட்டது. பின்னர் அவர்களை விரைவில் சொந்த ஊருக்கு அனுப்புவதாக கூறி திருப்பி அனுப்பினர்.

மேலும் செய்திகள்