கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்வையிட்ட தூய்மை பணியாளர்கள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை தூய்மை பணியாளர்களை பார்வையிட வைத்து தோட்டக்கலைத்துறையினர் கவுரவப்படுத்தினர்.

Update: 2020-05-22 02:41 GMT
கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி’ என வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் குளுகுளு சீசனையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மலர்க்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக தோட்டக்கலைத்துறையின் சார்பாக பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் நடவு செய்யப்படும்.

அதன்படி இந்த ஆண்டு 59-வது ஆண்டு மலர்க்கண்காட்சி நடத்துவதற்காக கடந்த 6 மாதங்களாக பூங்கா ஊழியர்கள் மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்டங்களாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட லில்லியம், காஸ்மாஸ், பேன்சி, ஜின்னியா, சால்வியா, டெல்பினியம், ஹீலியம், டேலியா உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பார்த்து ரசிக்க ஏற்பாடு

இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரையண்ட்பூங்கா, ரோஜாபூங்கா ஆகியவை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.

பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்க யாரும் வராததால் தோட்டக்கலைத்துறையின் சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மலர்களை பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரவேற்பு

முதல் நாளான நேற்று கொடைக்கானல் நகராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பூங்காவுக்கு வரவழைக்கப்பட்டு மலர்களை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஆர்.டி.ஓ. சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன், தாசில்தார் வில்சன் தேவதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பூங்காவுக்கு வருகை தந்த தூய்மை பணியாளர்களை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

இதனால் அவர்கள், மகிழ்ச்சியுடன் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பூங்காவை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்