வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஒருவர் கைது: போலீஸ் துணை சூப்பிரண்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து போலீஸ் துணை சூப்பிரண்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-22 05:21 GMT
குளித்தலை, 

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து போலீஸ் துணை சூப்பிரண்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலிகவுண்டனூரை சேர்ந்த ஒரு சமுதாய சங்கத்தின் மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் என்கின்ற மணிகண்டன் (வயது 29) என்பவர், சமூகவலைத்தளத்தில் வேறோரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் பதிவிட்ட பதிவிற்கு, தனது சமூகத்தை பெருமைபடுத்தும் விதமாகவும், வேறு சமுதாயத்தை இழிவுபடுத்தி மிரட்டும் நோக்குடன் இரு சமுதாயத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவாய்ப்புள்ளதாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலர் கலைச்செல்வன் குளித்தலை போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் குளித்தலை போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

வாக்குவாதம்

இந்தநிலையில் மணிகண்டனுக்கு ஆதரவாக அவருடைய சமுதாய சங்கத்தை சேர்ந்த வக்கீல் சங்க அமைப்பாளர் சந்தர், வக்கீல் தானு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நேற்று குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜாவை சந்தித்து பேசினர். அப்போதுதனது சமுதாயம் குறித்து அவதூறு கருத்து மற்றும் தரக்குறைவான விமர்சனத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மணிகண்டன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதையடுத்து பல பகுதிகளில் இருந்து அவருக்கு கொலைமிரட்டல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரு சமுதாயத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்துபவர்களை கைது செய்யக்கோரியும், மணிகண்டன் மீது வழக்கு பதியாமல் அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மேலும் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இதையடுத்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்வதாகக்கூறி போலீசார் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். போலீசார் வழக்கு பதியவில்லையெனில் சங்க முக்கிய நிர்வாகிகளின் அறிவிப்பின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்