பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாதால் 15 நாட்களாக காத்திருக்கும் பாய்மரப்படகுகள் சூறாவளி காற்றால் தவிக்கும் தொழிலாளர்கள்

பாம்பனில் தூக்குப்பாலம் திறக்கப்படாதால் 15 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் பாய்மரப்படகுகள் பலத்த சூறாவளி காற்றில் தத்தளிக்கின்றன. அதில் இருக்கும் தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர்.

Update: 2020-05-22 05:50 GMT
ராமேசுவரம், 

லட்சத்தீவில் இருந்து கடலூர் துறைமுகம் செல்ல பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2-ந்தேதி பாம்பன் கடல் பகுதிக்கு பாய்மரப்படகு ஒன்று குந்துகால் வந்தது. பின்னர் அந்த படகு தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பாய்மரப்படகில் சுமார் 10 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் லட்சத்தீவில் இருந்து கடலூர் செல்ல மற்றொரு பாய்மரப்படகு ஒன்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு வந்தது.

இதற்கிடையே பாம்பனில் 15 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் 2 பாய்மரப்படகுகளும் நேற்று ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதாக இருந்தது. ஆனால் பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சூறாவளி காற்று வீசியதாலும், கடல் சீற்றமாக காணப்பட்டதாலும் தூக்குப்பாலம் திறக்கப்படவில்லை. இதனால் பாய்மரப்படகில் உள்ளவர்கள் பல நாட்களாக படகிலேயே தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கயிறு அறுந்தது

காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தின் வேகம் குறைந்த பின்பு இந்த 2 பாய்மரப்படகுகளும் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. அதுபோல் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 2-வது நாளாக சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகின்றது. கடல் கொந்தளிப்பால் பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகின் நங்கூர கயிறு அறுந்தது.

இதனால் அந்த படகு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. கடலில் இழுத்து செல்லப்பட்ட படகை மீனவர்கள் மற்றொரு படகு மூலம் விரைந்து சென்று மீட்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இதனிடையே சூறாவளி காற்றால் ராமேசுவரம் ஸ்ரீராம்நகர், பாரதிநகர் பகுதியில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று மின்வெட்டு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்