50 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம்; விவசாயிகள் கவலை

விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 50 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2020-05-22 06:29 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் அக்னி நட்சத்திரம் வெயில் மக்களை வாட்டி வந்தாலும், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் முந்திரி, பலா உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அதோடு, மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததில் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் சின்ன வடவாடி, பெரியவடவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிர் செய்திருந்த வாழை மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

வாழை தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கின் காரணமாக வாழை தார்களை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து செல்வதில் பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வந்தார்கள். 

இந்த நிலையில் தற்போது ஊரடங்களில் தளர்வுகள் வழங்கிய நிலையில், வாழை மரங்கள் முறிந்து விழுந்து உள்ளது. இது விவசாயிகளை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த் துள்ளனர்.

மேலும் செய்திகள்