புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்திக்கு 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த ஒடிசா மாநிலத்தினர்

புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த ஒடிசா மாநிலத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

Update: 2020-05-22 06:49 GMT

சத்தியமங்கலம், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் ஒரு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நூற்பாலையில் தங்கி இருந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் வடமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நூற்பாலையில் தங்கி இருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என நினைத்து தங்களுடைய பொருட்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு நூற்பாலையில் இருந்து வெளியேறி ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கினர்.

இவர்கள் 22 கிலோ மீட்டர் தூரம் நடந்து சத்தியமங்கலத்தில் உள்ள மைசூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று நடந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் கூறுகையில், ‘ஒடிசா மாநிலத்துக்கு செல்லவேண்டும் என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாததால் நீங்கள் செல்லமுடியாது. மீறி நீங்கள் ரெயில் நிலையம் சென்றாலும், ரெயிலில் உங்களை அழைத்து செல்லமாட்டார்கள்,’ என தெரிவித்தனர்.

பின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கி ஒரு வாகனத்தில் நூற்பாலைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்