அகமதாபாத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் 494 பேர் நெல்லை வந்தனர்

அகமதாபாத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் 494 பேர் நெல்லை வந்தனர்.

Update: 2020-05-23 00:50 GMT
நெல்லை, 

அகமதாபாத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் 494 பேர் நெல்லை வந்தனர்.

சிறப்பு ரெயில்

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள், மாணவர்கள், வியாபாரிகள் தங்கள் சொந்த ஊருக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து சொந்த ஊருக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வருகிறது.

வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், இஸ்ரோ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை முறைப்படி மாவட்ட நிர்வாகம் மூலம் கணக்கெடுத்து பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பியது. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களும் கணக்கெடுக்கப்பட்டு அந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட 398 பேர் கடந்த 18-ந் தேதி நெல்லை வந்தனர். கடந்த 19-ந் தேதி மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 419 பேர் அழைத்து வரப்பட்டனர்.

494 பேர்

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை, திருச்சி, மதுரை வழியாக நேற்று மாலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட 494 பேர் வந்து இறங்கினர். அதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர். மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 280 பேர் வந்தனர். அவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி, நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்