தாமிரபரணி ஆறு நிறம் மாறியது ஏன்? கலெக்டர் ஷில்பா விளக்கம்

காரையாறு அணையின் அடிப்பகுதியில் உள்ள மதகில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் கீழ் பகுதியில் தேங்கியுள்ள சகதி, மண், இலை, தலைகள் மற்றும் மக்கி போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது.

Update: 2020-05-23 01:17 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆறு நிறம் மாறிவருவதாக எழுந்த பிரச்சினை தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர், மின்வாரிய பொறியாளர், நகராட்சி ஆணையாளர் மற்றும் அம்பை தாசில்தார் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். கடந்த 11-ந் தேதி சேர்வலாறு அணையின் நீர்மட்டம் மின் உற்பத்தி செய்வதற்கு உண்டான குறைந்தபட்ச அளவுக்கு கீழ் சென்றதால், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறையின் நீர் தேவை 200 கன அடியாக இருந்ததால், அதனை பூர்த்தி செய்ய காரையாறு அணையின் நீர் வெளியேற்றம் 150 கன அடியாக உயர்ந்தப்பட்டது. பொதுத்துறையினரின் நீர் தேவை 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால், கடந்த 15-ந் தேதி காலை 5 மணியில் இருந்து காரையாறு அணையின் நீரின் வெளியேற்றம் 150 கன அடியில் இருந்து 350 கன அடியாக உயர்த்தப்பட்டது.

குடிநீர் தேவைக்காகவும், விவசாய தேவைக்காகவும் காரையாறு அணையின் அடிப்பகுதியில் உள்ள மதகில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் கீழ் பகுதியில் தேங்கியுள்ள சகதி, மண், இலை, தலைகள் மற்றும் மக்கி போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது. அம்பை நகராட்சி ஆணையாளர் மூலம் ஆற்றின் நீரினை அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரசாயன கழிவுகள் கலக்கவில்லை என்பது தெரியவந்தது. கடந்த 11-ந் தேதி முதல் சற்று அதிக அளவிலான நீர் வெளியேற்றத்தின் காரணமாக மீண்டும் தாமிரபரணி ஆற்றின் வண்ணம் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பாபநாசம் அணை முதல் சீவலப்பேரி வரையுள்ள பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரி நீரின் பரிசோதனை முடிவுகளை பெற்று, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்