பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு: குமரியில் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் 45 பேர் கைது

பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-23 01:48 GMT
நாகர்கோவில், 

பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி நிரந்தர தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முழு சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

சாதாரண ஏழை எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கான நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவிலில்...

குமரி மாவட்டத்திலும் நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் 5 பேர் தான் பங்கேற்க வேண்டும், அதற்கு மேல் கலந்து கொண்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், துணைத்தலைவர் அந்தோணி, எச்.எம்.எஸ். சங்க மாநில தலைவர் சுப்பிரமணியபிள்ளை, எல்.பி.எப். சங்க மாநில துணைச் செயலாளர் இளங்கோ, எம்.எல்.எப். மாவட்ட தலைவர் மகராஜ பிள்ளை ஆகியோர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

45 பேர் கைது

இதைப்போல் நாகர்கோவிலில் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம், வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலகம், வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் மில், செட்டிகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, கோட்டார் கம்பளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்த்தாண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நேற்று காலை நடந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ஜாண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருதங்கோட்டில் சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு உறுப்பினர் பரிமளாபாய் தலைமையிலும், திக்குறிச்சியில் சுரேஷ்குமார், ஞாறான்விளையில் இருதயராஜ், ஜெயராஜ் தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. 4 இடங்களில் மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேருக்கு மேல் இருந்தால் தான் கைது செய்வோம் என்று கூறிய போலீசார் 5 பேர், 4 பேரையும் கைது செய்திருக்கிறார்கள் என சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 45 முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்றும், மார்த்தாண்டத்தில் 2 இடங்கள், குலசேகரம், கருங்கல், ஆரல்வாய்மொழி தலா ஒரு இடங்கள் என 5 இடங்களில் 5 பேருக்கு மேல் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக 45 பேர் கைது செய்யப்பட்டனர் என்றனர்.

மேலும் செய்திகள்