120 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டத்தில் நேற்று 120 இடங்களில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-23 02:58 GMT
சேலம்,  

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு எதிராகவும், 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேர கட்டாயமாக்கிய மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. 

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

சேலம் முள்ளுவாடி கேட் அருகே தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்தும், கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் அதன் செயலாளர் பழனியப்பன் தலைமையில் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச மாவட்ட தலைவர் பசுபதி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் உதயகுமார், மாதில துணை செயலாளர் சிங்காரவேல், ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும் செய்திகள்