427 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்

திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளம் ஊராட்சியில் 427 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2020-05-23 03:58 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஒன்றியம், சூரக்குளம் ஊராட்சியில் 427 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்பு பைகளை மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் தரமான, ருசியான, விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வை பொறுத்தவரை அவித்த முட்டையுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தில் 3 லட்சம் பேர் உணவு அருந்தியுள்ளனர். மக்களை அவர்களின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று விலையில்லா அரிசி பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம். ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் “ஒன்றிணைவோம் வா” என்று கூறுகிறார். அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனை அவர் எதற்கு ஆரம்பித்தாரோ, அது நடக்கவில்லை என்பது தான் உண்மை.” என்றார்.

மேலும் செய்திகள்