ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2020-05-23 05:17 GMT
புதுக்கோட்டை, 

ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் தொழிலாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 33 தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உணவு, முக கவசம் உள்ளிட்டவைகள் வழங்கி உரிய சமூக இடைவெளியுடன் களமாவூரில் இருந்து பஸ் மூலம் திருச்சிக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி வழியனுப்பி வைத்தார். அங்கிருந்து ரெயில் மூலம் ராஜஸ்தான் செல்கின்றனர்.

மாவட்டத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3,064 பேர் பணி செய்து வந்தனர். அதில் 21 மாநிலங்களை சேர்ந்த 1,800 பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 108 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை பல்வேறு கட்டங்களாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். முன்னதாக வழியனுப்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முதியவர் சாவு

*புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

*மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட குடிநீர்குழாய் இணைப்புகளை துண்டித்தனர்.

சாராயம் காய்ச்சியவர்கள் கைது

* மாத்தூர் போலீஸ் சரகம் எலுவம்பட்டி குளத்து பகுதியில் சாராயம் காய்ச்சியதாக எழுவம்பட்டியை சேர்ந்த மூர்த்தி ( 45), தனகோபால் (50) மற்றும் ஆலங்குளம் குளத்து பகுதியில் சாராயம் காய்ச்சிய எலுவம்பட்டி பிரான்சிஸ் (43), ஆனந்தன் (38) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மணல் கடத்தல்

* அறந்தாங்கி அருகே அழியாநிலை வெள்ளாற்று பகுதியில் மணல் அள்ளி கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (32) சங்கர்(45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் குரும்பூர் ஒத்தகடை பகுதியில் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த கோங்குடியை சேர்ந்த முருகன்(40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் லாரியில் வந்த சண்முகம், சரவணன் இருவரும் ஓடி விட்டனர். இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் சீலட்டூர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிவந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தை ரோட்டில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்த தொழிலாளர்கள்

* திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பள்ளத்தி விடுதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

எம்.பி.க்கள் மீது பா.ஜனதா போலீசில் புகார்

* திருமயம் போலீஸ் நிலையத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் மீது திருமயம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா ஒன்றிய தலைவர் கண்ணனூர் முருகேசன் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அப்போது, மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஆதவா செல்வகுமார், மாவட்டசெயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

கோரையாற்றில் மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்

* விராலிமலை தாலுகா ராஜகிரி கோரையாற்றில் மணல் அள்ளப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் கீரனூர் பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, கோரையாற்றில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரிகளை பறிமுதல் செய்து இலுப்பூர் தாலுகா திருநல்லூரைச் சேர்ந்த வைரமுத்து (வயது 37),சரவணன்(35) மற்றும் மேப்பூதகுடி குளவாய்ப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல்(36),் விராலிமலையைச் சேர்ந்த சிவஞானம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் கத்தலூர் கிராமம் வீரம்பட்டியில் அடையாளம் தெரியாத நபர்கள் குவித்து வைத்திருந்த 36 யூனிட் மணல் குவியலை விராலிமலை போலீசார் தகவலின்பேரில் விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணக்குமார் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊராட்சி தலைவர் மீது பெண் புகார்

* அறந்தாங்கி அருகே நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல். இவர் மீது நாகுடி அருணாசலபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் நாகுடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், 100 நாள் வேலை திட்டத்தில் தனக்கு பதிலாக வேறு நபரை நியமித்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேலிடம் கேட்டேன். அதற்கு அவர் அவதூறாக பேசி தொலைபேசியில் மிரட்டினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுதல்

* கந்தர்வகோட்டை அருகே உள்ள கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் நேரில் சென்று, சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சிறுமியின் சகோதரிகள் மேற்படிப்புக்கு தேவையான உதவிகளையும் ஆணையும் செய்யும் என்றும், கொலை வழக்கை மிக விரைவில் தனிப்படை அதிகாரிகள் முடித்து தருவார்கள் என்றும் குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள் என்றும் ஆணை உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்