பெரம்பலூரில் ரூ.22 லட்சம் மோசடி? வாலிபரை காரில் கடத்தி மிரட்டிய 4 பேர் கைது

பெரம்பலூரில் ரூ.22 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி தர மறுத்த வாலிபரை காரில் கடத்தி சென்று மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-23 06:09 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூரில் ரூ.22 லட்சம் மோசடி செய்ததாகவும், பணத்தை திருப்பி தர மறுத்த வாலிபரை காரில் கடத்தி சென்று மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் புரோக்கர்

பெரம்பலூர் மேற்கு ரோஸ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் மேலும் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது நண்பரான ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் ஒருவர், தனது நண்பரான ரவிச்சந்திரனிடம் எசனை பாப்பாங்கரையை சேர்ந்த ராமசாமி மகன் சுரேசை(32) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி தேதி ரவிச்சந்திரனிடம் ஒரு கிலோ தங்க நகை ரூ.43 லட்சத்திற்கு தற்போது விற்கப்படுகிறது. ஆனால் எனக்கு திருச்சியில் தெரிந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் அதிகளவில் தங்க நகை உள்ளதாவும், ரூ.38 லட்சத்திற்கு ஒரு கிலோ நகை வாங்கி தருகிறேன். இதன் மூலம் ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும் என சுரேஷ் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ரவிச்சந்திரன் முன்பணமாக ரூ.18 லட்சத்தை சுரேசிடம் கொடுத்துள்ளார். மேலும் ரூ.2 லட்சத்தை சுரேஷ் வங்கி கணக்கிற்கு ரவிச்சந்திரன் மாற்றம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 23-ந் தேதி ரவிச்சந்திரனுக்கு போன் செய்து நீ கொடுத்த பணத்தில் ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் கள்ள நோட்டு உள்ளதால், உடனே ரூ.2 லட்சம் பணத்தை எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பவேண்டும் என சுரேஷ் கூறியுள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரன் உடனே ரூ.2 லட்சம் பணத்தை சுரேஷ் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

காரில் கடத்தி சென்று...

பின்னர் ஒரு கிலோ தங்க நகை ரூ.52 லட்சமாகும். ஆகையால் நீ கொடுத்த 20 லட்சம் போக மீதமுள்ள ரூ.32 லட்சம் பணத்தை நீ தரவேண்டும் என ரவிச்சந்திரனிடம் சுரேஷ் கூறியுள்ளார். இதற்கு ரவிச்சந்திரன் பணம் தரமுடியாது. எனக்கு நகை வேண்டாம். நான் கொடுத்த ரூ.22 லட்சத்தை திருப்பி கொடு என சுரேசிடம், ரவிச்சந்திரன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சுரேஷ் நீ என்னிடம் கொடுத்த பணத்திற்கு ஆதாரம் இல்லை. பணம் தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் பணம் தரமால் ஏமாற்றிய சுரேஷை கடத்தி மிரட்டி பணம் பெற ரவிச்சந்திரன் முயன்றுள்ளார். இதற்காக ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான பெரம்பலூர்- எளம்பலூர் சாலையை சேர்ந்த முத்துக்குமரன்(47), தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கவேல் மகன் பாஸ்கர்(24), பெரியகுளத்தை சேர்ந்த அழகுமலை மகன் வாழவந்தகுமார்(27), முத்தையா ஆகியோருடன் சேர்ந்து கடந்த 4-ந் தேதி சுரேஷை காரில் கடத்தி கொண்டு திண்டுக்கல் சென்று அங்கு சுரேஷை தாக்கி, மிரட்டி வெற்று பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டு இறக்கிவிட்டு சென்று விட்டனராம்.

4 பேர் கைது

இதுகுறித்து தன்னை கடத்தி சென்று மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுரேஷ் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், பாஸ்கர், வாழவந்தகுமார், முத்துக்குமரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்தையாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே பணம் கொ டுத்து ஏமாந்த ரவிச்சந்திரன் தான் கொடுத்த ரூ.22 லட்சத்தை சுரேசிடம் பெற்று தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆன்லைன் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

மேலும் செய்திகள்