மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மின்வாரிய-போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் மின்வாரிய- போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-23 06:31 GMT
பெரம்பலூர், 

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் மின்வாரிய- போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மின்வாரிய ஊழியர்களும், அரசு போக்குவரத்து ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்பகிர்மான பெரம்பலூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்களும், துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் ஊரடங்கை காரணம் காட்டி 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக உயர்த்த கூடாது.

நிவாரணம் வழங்க வேண்டும்

தொழிலாளர் நல சட்டங்களை முடக்க கூடாது. பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாகுபாடின்றி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க வேண்டும். மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டங்களில் சி.ஐ.டி.யு., தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில்

இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் துணை தலைவர் சம்பந்தம் மற்றும் ஜெயங்கொண்டம் கிளை தலைவர் கொளஞ்சி ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக நேர கட்டுப்பாட்டு அறை முன்பாகவும், போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பாக என 2 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தனித்தனி பிரிவாக கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்