குரோம்பேட்டை பகுதியில் என்ஜினீயர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

குரோம்பேட்டை பகுதியில் என்ஜினீயர் உள்பட ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2020-05-23 22:00 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயது சிவில் என்ஜினீயர், அவருடைய 44 வயது மனைவி, 18 வயது மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை அம்பாள் நகர் பகுதியைச்சேர்ந்த 38 வயது ஆண், பம்மலைச் சேர்ந்த 32 வயது பெண், கவுரிவாக்கத்தைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, அவருடைய மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கும், அபிராமி நகரைச் சேர்ந்த 69 வயது மூதாட்டிக்கும், முடிச்சூரைச் சேர்ந்த 53 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733 ஆனது.

இவர்களில் 245 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 6 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது நர்சு ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாடம்பாக்கம் குத்தனூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆணுக்கும், கொரோனா உறுதியானதால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இவர்கள் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 264 ஆனது. இவர்களில் 155 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 108 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்