புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் நேற்று மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-23 23:00 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதையொட்டி கடந்த மார்ச் 24-ந் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வழக்கம் போல் செயல்படத்தொடங் கின. பஸ், வாகன போக்குவரத்தும் தொடங்கியது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தொடர்ந்து திறக்கப்படாமல் தடைகள் நீடித்து வருகின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடக்கம் முதல் ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 4-ம் கட்டமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் புதுவைக்கு திரும்பியவர்களால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நேற்று முன் தினம் வரை புதுவையில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் புதிதாக நேற்று வடமங்கலம், குருமாம்பேட், வேல்முருகன் நகரை சேர்ந்த தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவியது குறித்து ஆய்வு செய்ததில் இவர்கள் 3 பேரும் ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களையும் சேர்த்து புதுச்சேரி பிராந்தியத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மாகியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்காலில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். காரைக்கால், ஏனாமில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்