2,500 பேருக்கு மட்டுமே அனுமதி பாஸ் வழங்கிய நிலையில் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல 6 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு மந்திரி பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்

2,500 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கிய நிலையில் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல 6 ஆயிரம் பேர் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் குவிந்தனர்.

Update: 2020-05-23 23:00 GMT
பெங்களூரு,

2,500 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கிய நிலையில் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல 6 ஆயிரம் பேர் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மந்திரி சுதாகர் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சிக்கியுள்ள வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட ரெயில்களில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் தங்கியுள்ள வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சேவாசிந்து இணையதள பக்கத்தில் பதிவு செய்தனர். அவர்களில் 2,500 பேருக்கு பாஸ் வழங்கி அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த 6 ஆயிரம் தொழிலாளர்களும் நேற்று அரண்மனை மைதானம் அருகே குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், முதியவர்கள் ஆவார்கள். ஆனால் அவர்கள் யாரும் தனிமனித விலகலை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் நின்றனர். இதற்காக அவர்கள் காலையிலேயே அங்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்றிருந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, அந்த தொழிலாளர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீஸ் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று (நேற்று) 2,500 பேர் செல்ல மட்டுமே ரெயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதம் உள்ளவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் மந்திரி அவர்களிடம் கூறினார். அதுவரை பொறுமை காக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் பேசும்போது, “நீங்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல அரசு செலவில் ரெயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்குமாறு ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை விடுக்கப்படும்“ என்றார்.

அப்போது அந்த தொழிலாளர்கள், தங்களை வர சொல்லிவிட்டு, இப்படி மீண்டும் திரும்பி போகுமாறு சொன்னால் நாங்கள் என்ன செய்வோம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதன் பிறகு ரெயிலில் செல்ல அனுமதிக்கப்பட்ட 2,500 பேரை தவிர மற்றவர்கள் அங்கிருந்து கலைந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றத்துடன் பெங்களூருவில் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்றனர்.

மேலும் செய்திகள்