கட்டணம் 50 சதவீதம் வரை உயர்வு: கோவையிலிருந்து நாளை முதல் விமானங்கள் இயக்கப்படுமா? மாநில அரசிடமிருந்து உத்தரவு வராததால் குழப்பம்

மாநில அரசிடமிருந்து தெளிவான உத்தரவு வராததால் கோவையிலிருந்து நாளை(திங்கட்கிழமை) முதல் விமானங்கள் இயக்கப்படுமா?என்பதில் குழப்பம் உள்ளது.

Update: 2020-05-23 22:36 GMT
கோவை,

மாநில அரசிடமிருந்து தெளிவான உத்தரவு வராததால் கோவையிலிருந்து நாளை(திங்கட்கிழமை) முதல் விமானங்கள் இயக்கப்படுமா?என்பதில் குழப்பம் உள்ளது. இருந்தபோதிலும் ஆன்லைனில் தொடங்கியுள்ள விமான கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

50 சதவீதம் வரை கட்டணம் உயர்வு

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 25-ந் தேதி (நாளை) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது அதன்படி கோவையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது. இதுகுறித்து கோவையில் உள்ள டிராவல் ஏஜெண்டு ராஜேஷ் கூறியதாவது:-

கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெல்லிக்கு ரூ.9 ஆயிரம், மும்பைக்கு ரூ.8 ஆயிரம், பெங்களூருவுக்கு ரூ.3 ஆயிரத்து 500, ஐதராபாத்துக்கு ரூ.5 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண நாட்களில் இருந்த கட்டணத்தை விட தற்போது 30 முதல் 50 சதவீதம் வரை அதிகமாகும். கடைசி நாளில் முன்பதிவு செய்தால் இன்னும் கட்டணம் அதிகமாகும். கடந்த 2 நாட்களாகத்தான் முன்பதிவு தொடங்கி உள்ளது. இதனால் எத்தனை சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.

ஏர் பஸ் 320 போன்ற பெரிய விமானங்களில் இரண்டு பக்கமும் 3 இருக்கைகள் இருக்கும். தனி நபர் இடைவெளி காரணமாக அதில் நடுவில் உள்ள இருக்கை யாருக்கும் ஒதுக்கப்பட மாட்டாது. சிறிய விமானங்களில் இரண்டு பக்கமும் உள்ள 2 இருக்கைகளில் ஒன்றில் தான் பயணிகள் உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானங்களை இயக்குவதில் குழப்பம்

கோவையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள போதிலும் விமானத்தை இயக்குவது குறித்து மாநில அரசிடம் இருந்து எந்தவித தெளிவான அறிவிப்பும் வராததால் குழப்பம் நிலவுகிறது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விமானங்களின் இயக்கம் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் கோவையிலிருந்து 25-ந்தேதி(நாளை) முதல் விமானங்கள் இயக்குவது குறித்து மாநில அரசிடமிருந்து எந்த விதமான தெளிவான உத்தரவும் இதுவரை வரவில்லை. அது வந்தால் தான் விமானங்களை இயக்குவது குறித்து உறுதியாக சொல்ல முடியும். நாங்கள் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம். எனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும் கோவையிலிருந்து விமானங்கள் இயக்கப்படுமா? என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்