அரசு உத்தரவு எதிரொலி: பல ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் பணியாற்றிய அரசு ஊழியர்கள்

வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் பல ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் அரசு ஊழியர்கள் பணியாற்றினார்கள்.

Update: 2020-05-23 22:47 GMT
கோவை,

வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் பல ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் அரசு ஊழியர்கள் பணியாற்றினார்கள்.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் தான் பணி செய்து வந்தனர். அதாவது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் வேலை நாட்களாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் இருந்து வந்தன. சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வாரத்தில் 5 நாட்கள் தான் வேலை நாளாக இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. அத்தியாவசிய சேவைகளான வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த பணியாளர்கள் மட்டும் வேலைக்கு வந்தனர்.

சனிக்கிழமைகளில் பணியாற்றினார்கள்

இதற்கிடையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என்றும், வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்காக தனியாக அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் நேற்று முதன்முறையாக சனிக்கிழமையில் பணியாற்றினார்கள். இதற்கு முன்பு அவர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றியது இல்லை. இதுகுறித்து கோவை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் தேசிங்கு ராஜன் கூறியதாவது:-

பல ஆண்டுகளுக்கு பிறகு...

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் தான் பணியாற்றி வந்தனர். அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகள் அவர்களுக்கு விடுமுறை நாட்களாகும். சில துறைகளில் சனிக்கிழமைகளில் சுழற்சி அடிப்படையில்(டேர்ன் டூட்டி) ஏதாவது ஒரு அலுவலர் பணியாற்றுவார். பெரும்பாலானவர்களுக்கு விடுமுறையாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று(நேற்று) தான் முதன்முறையாக சனிக்கிழமைகளில் அரசு ஊழியர்கள் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புது வித அனுபவமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்