மும்பையில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக 1,500 இடங்களில் நோய் பரப்பும் கொசுபுழுக்கள் கண்டுபிடித்து அழிப்பு மாநகராட்சி தகவல்

மும்பையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,479 இடங்களில் நோய் பரப்பும் கொசுபுழுக்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2020-05-23 23:44 GMT
மும்பை,

மும்பையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் பருவமழைக்காலம் ஆகும். ஆண்டுதோறும் மழைக்கால நோய்களால் மும்பையில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றன.

தற்போது மும்பையை கொரோனா வைரஸ் திணறடித்து வரும் நிலையில், மழைக்காலத்தில் கொசுவினால் நோய் பரவுவதை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மழைக்காலம் நெருங்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கொசு உற்பத்தியை தடுக்க நோய் பரப்பும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை (லார்வா) அழிக்கும் பணியில் மாநகராட்சியின் பூச்சிக்கொல்லி துறையை சேர்ந்த 1,500 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, 1,146 இடங்களில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு லார்வாக்களும், 333 இடங்களில் மலேரியாவை உண்டுபண்ணும் அனோபிலிஸ் ஸ்டீபன்சி கொசு லார்வாக்களும் என மொத்தம் 1,479 இடங்களில் நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டதாக மாநகராட்சி பூச்சிக்கொல்லி துறை அதிகாரி ராஜன் நரிங்கேக்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்