கடந்த 14 நாட்களில் மும்பையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்

கடந்த 14 நாட்களில் மும்பையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதென்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல் வெளியிட்டுள்ளார்.

Update: 2020-05-24 00:20 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ள போதும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் 2 ஆயிரத்து 608 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக மாநிலத்தில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 47 ஆயிரத்து 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மராட்டியத்தில் மேலும் 60 போ் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மாநிலத்தில் நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,577 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நேற்று புதிதாக 821 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானார்கள். இதுவரை மாநிலத்தில் 13 ஆயிரத்து 404 பேர் நோய் பாதிப்பில் குணமாகி உள்ளனர்

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 817 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல நகரில் மேலும் 40 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதில் 25 பேர் ஆண்கள். 15 பேர் பெண்கள். இதனால் மும்பையில் நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 949 ஆக உயர்ந்து உள்ளது. நகரில் இதுவரை 7 ஆயிரத்து 476 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். மும்பையில் தற்போது குடிசைப்பகுதிகளில் 659 கட்டுப்பாட்டு மண்டலங்களும், 2 ஆயிரத்து 11 கட்டிடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பை மாநகராட்சி நடத்தி வரும் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த டாக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது கொரோனாவுக்கு எதிராக கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போராடி வரும் டாக்டர்களை வெகுவாக பாராட்டினார். இந்த போரில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும் கடந்த 14 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்