எடப்பாடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 3,150 பேருக்கு அரிசி, காய்கறிகள் முதல்-அமைச்சர் வழங்கினார்

எடப்பாடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 3,150 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2020-05-24 02:09 GMT
எடப்பாடி, 

எடப்பாடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 3,150 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

3,150 பேருக்கு அரிசி

எடப்பாடியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த நிதியில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 ஆயிரத்து 150 பேருக்கு அரிசி, காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்தார்.

இதன்படி நேற்று எடப்பாடி பயணியர் மாளிகையில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக எடப்பாடி நகர நிர்வாகிகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். மீதமுள்ள நிர்வாகிகளுக்கு அவரவர் வசிக்கும் ஒன்றியங்களிலேயே அரிசி சிப்பம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.

வார்டு செயலாளர்கள்

எடப்பாடி நகர வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய கிளை செயலாளர்கள், கொங்கணாபுரம், நங்கவள்ளி ஒன்றிய கிளை செயலாளர்கள், கொங்கணாபுரம், பூலாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் ஆகிய பேரூர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 150 நிர்வாகிகளுக்கு அரிசி சிப்பம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் எடப்பாடி நகர செயலாளர் முருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டம்

இதைத்தொடர்ந்து எடப்பாடி பயணியர் மாளிகையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு பணிகள், குடிமராமத்து பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மகளிர் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்