வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 7,599 பேர் கைது 6,682 வாகனங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 7 ஆயிரத்து 599 பேர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2020-05-24 03:58 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 7 ஆயிரத்து 599 பேர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 682 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது 4-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு செல்லும்போது முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் கொரோனா வைரஸ் தொற்றை அலட்சியப்படுத்தி வழக்கம்போல் பொதுமக்கள் வீதிகளில் வலம் வந்தனர். பலர் மோட்டார் சைக்கிள், கார்களில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

7,599 பேர் கைது

அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஊரடங்கின்போது உத்தரவை மீறி சுற்றித்திரிந்ததாக 7 ஆயிரத்து 212 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன்பேரில் 7 ஆயிரத்து 599 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுக்கப்பட்டனர். 6 ஆயிரத்து 682 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளை மீறிய 732 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி முதல் அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் 4,147 மோட்டார் சைக்கிள்கள், 104 ஆட்டோக்கள், 93 நான்கு சக்கர வாகனங்கள் என்று மொத்தம் 4,344 வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஆட்டோவில் டிரைவரை தவிர ஒருவரும், காரில் டிரைவரை தவிர 2 பேரும் பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்