மரக்கிளையில் அமர்ந்து இருந்த வாலிபரை விலங்கு என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி

சித்தாப்புரா தாலுகாவில், மரக்கிளையில் அமர்ந்து இருந்த வாலிபரை விலங்கு என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-24 22:15 GMT
மங்களூரு,

சித்தாப்புரா தாலுகாவில், மரக்கிளையில் அமர்ந்து இருந்த வாலிபரை விலங்கு என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கவலகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் நாராயணகவுடா(வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்புறத்தில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரிவர சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் அங்குள்ள ஒரு மரத்தில் ஏறி கிளையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான ராமகண்ணா நாயக் என்பவர், மரத்தில் ஏதோ விலங்குதான் அமர்ந்து இருக்கிறது என்று நினைத்து அச்சம் அடைந்தார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு சென்று நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டார். இதில் மரக்கிளையில் அமர்ந்திருந்த பிரதீப்பின் வயிற்றுப் பகுதியில் குண்டு துளைத்தது. இதில் நிலைகுலைந்த அவர் மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சித்தாப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிரதீப் அமர்ந்து இருப்பது தெரியாமல், இருட்டில் ஏதோ விலங்குதான் பதுங்கி இருக்கிறது என்று நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக ராமகண்ணா நாயக் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து ராமகண்ணா நாயக்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்