கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

Update: 2020-05-24 23:00 GMT
பெங்களூரு,

அந்த ஊரடங்கு 4-வது முறையாக வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதுவரை ஞாயிற்றுக் கிழமை நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 18-ந் தேதி அறிவித்தார். ஆனால் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனால் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் ஓடுகின்றன. பெரிய வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் தவிர மற்ற அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் கர்நாடகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் அறிவிப்புப்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெங்களூருவில் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. பெங்களூருவின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் மத்திய பேருந்து நிலையம், பெங்களூரு மாநகர பஸ் நிலையம் (பி.எம்.டி.சி.) மெட்ரோ இன்டர்சேஞ்ச் நிலையம், சிட்டி ரெயில் நிலையம் போன்றவை உள்ளன. அங்கு பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெஜஸ்டிக்கில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வணிக நிறுவனங்கள், மதுபான கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு இருந்தன. ஆனால் உணவகங்களில் சமையல் கூடம் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. உணவுகளை பார்சல் முறையில் விற்பனை செய்தனர்.

ஒரு சில இடங்களில் மட்டுமே உணவக சமையல் கூடங்கள் திறக்கப்பட்டு இருந்தன. சலூன் கடைகள், அழகு நிலையங்களும் திறக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருந்தன. பால், மருந்து கடைகள் எப்போதும் போல் செயல்பட்டன.

அதே வேளையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இறைச்சி கடைகள் திறந்திருந்தன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் இறைச்சி கடைகளில் கூடியிருந்தனர். இதனால் இறைச்சி கடைகள் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து கோழி, ஆட்டிறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.

பெங்களூருவில் எம்.ஜி.ரோடு, ஜே.சி.ரோடு, லால்பாக் ரோடு, ரிச்மண்ட் ரோடு, ஓசூர் ரோடு, கஸ்தூரிபா ரோடு உள்பட அனைத்து சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சில கார்கள் சாலைகளில் இயங்கியதை பார்க்க முடிந்தது. பெரும்பாலான சாலைகள் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டிருந்தன. சில முக்கிய சாலைகள் மட்டும் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு இருந்தன.

முக்கியமான சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேவையின்றி சுற்றிய வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். ஒரு சில இடங்களில் பால் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே வந்தனர். அதே போல் மைசூரு, துமகூரு, கோலார், மங்களூரு, உடுப்பி, உப்பள்ளி, பெலகாவி உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது.

பெங்களூரு யஷ்வந்தபுரா, கொல்லரஹட்டி, தாவணகெரே, கதக் உள்ளிட்ட சில பகுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். தனிமனித இடைவெளியை பின்பற்றினர். அந்த நிகழ்ச்சிகளில் 25 முதல் 30 பேர் வரை கலந்து கொண்டனர். மொத்தத்தில் முழு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்