ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் என்று நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2020-05-24 22:26 GMT
திருப்பூர், 

திருப்பூரில் குமரன் ரோட்டில் அட்டிகா கோல்டு என்ற பெயரில் பழைய நகைகளை விலைக்கு வாங்கும் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் மேலாளராக தங்கராஜ் (வயது 33) என்பவரும், மற்றொரு பெண் ஊழியரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இவர்கள் இருவரும் பணியில் இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்த ஆசாமி ஒருவர் கடைக்குள் புகுந்தார். பின்னர் அந்த ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி நகை மற்றும் பணத்தை எடுத்து கொடுக்குமாறு மிரட்டினார்.

இதனால் பயந்து போன மேலாளர் மற்றும் அந்த பெண் ஊழியர் இருவரும் பணம் மற்றும் நகையை எடுத்துக்கொடுத்தனர். பின்னர் அந்த ஆசாமி இருவரையும் கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தங்கராஜ் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார்.

கைது

அந்த புகாரில் கடைக்குள் புகுந்த ஆசாமி 10 பவுன் நகை மற்றும் ரூ.29 ஆயிரத்து 270 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் காவிலிபாளையத்தை சேர்ந்த அழகுவேல் (34) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து, அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் 10¾ பவுன் நகையை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 20¾ பவுன் நகை மற்றும் ரூ.14 ஆயிரம், கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக

கைதான அழகுவேல் போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த பல மாதங்களாக திருப்பூரில் தங்கி இருந்து வீடு உள்பட பல இடங்களில் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தேன். அதன் மூலம் கிடைக்கும் நகைகளை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அந்த நகைக்கடையில் அடகு மற்றும் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை செலவழித்து வந்தேன். இந்த நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். இதனால் என்னால் முன்பு போல வீடுகளுக்கு சென்று திருட முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமலும், செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமத்தை சந்தித்து வந்தேன்.

அப்போது தான் நான் நகைகளை அடகு வைக்கும் கடை எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த கடையின் அருகே எந்த கடையும் கிடையாது. அங்கு ஊழியர்களும் குறைவாக இருப்பதையும், பாதுகாப்பு வசதிகள் இல்லாததும் நினைவிற்கு வந்தது. அங்கு நகை மற்றும் பணம் அதிகமாக இருக்கும் என்பதால், அவற்றை கொள்ளையடித்து சந்தோஷமாக வாழலாம் என நினைத்தேன். அதன்படி சம்பவத்தன்று அங்கு சென்று அரிவாளை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றேன். போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்