60 நாட்களாக கட்டணமின்றி தூய்மை பணியாளர்களுக்காக இயக்கப்படும் அரசு பஸ்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம்

கோவையில் கடந்த 60 நாட்களாக கட்டணமின்றி தூய்மை பணியாளர்களுக்காக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்கிறார்கள்.

Update: 2020-05-24 23:29 GMT
இடிகரை,

கொரோனா காரணமாக கடந்த 2 மாதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு பஸ்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன.

கோவை சாய்பாபாகாலனியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பஸ்களில், சாய்பாபா காலனி, காந்திபுரம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சரவணம்பட்டி, கீரணத்தம், துடியலூர், கணுவாய், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், பீளமேடு, உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு தூய்மை பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்கள் வேலை செய்யும் பகுதிக்கு கொண்டு சென்று விடுகின்றனர். பஸ்சில் செல்லும் போது தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்கின்றனர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

இது குறித்து அரசு பஸ் டிரைவர் இன்பம் கூறும்போது, கோவையில் கடந்த 60 நாட்களாக அரசு பஸ்களை இயக்கி வருகிறோம். 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் தூய்மை பணியாளர்களை வேலைக்கு அழைத்து சென்று விட்டு வருகிறோம். அவர்கள் பஸ்களில் ஏற வரும் போாது முக கவசம் மற்றும் கையுறை அணிந்து வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு சீட்டில் ஒருவர் என 25 பேர் உட்கார்ந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களுக்காக பஸ் ஓட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தூய்மை பணியாளர் சிவகாமி கூறும்போது, நாங்கள் தூய்மை பணியாளர்களாக உள்ளோம். தற்போது வேலைக்கு செல்ல கட்டணமின்றி அரசு பஸ்களில் அழைத்து செல்கின்றனர். நாங்கள் தமிழக அரசுக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளோம். கடந்த 60 நாட்களில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்து வருகிறோம். நாங்கள் பாதுகாப்புடன் பணியாற்றுவது போல் மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எங்களுக்காக கட்டணமின்றி அரசு பஸ்கள் இயக்குவது பெருமையாக உள்ளது என்றார்.

அரசு ஊழியர்கள்

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்களுக்காக 13 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு ஊழியர்கள் கோவையில் உள்ள அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்