கொரோனா பரவலை தடுப்பதற்காக திடீரென ஊரடங்கை அமல்படுத்தியது தவறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

கொரோனா பரவலை தடுப்பதற்காக திடீரென ஊரடங்கை அமல்படுத்தியது தவறு என மத்திய அரசு மீது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

Update: 2020-05-25 00:00 GMT
மும்பை,

மராட்டியம் கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மராட்டியம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்த ஆட்கொல்லி வைரசின் பரவலை கட்டுப்படுத்த 4 முறை ஊரடங்கை நீட்டித்த பின்னரும் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொலைக்காட்சியில் மாநில மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஊரடங்கை திடீரென அமல்படுத்தியது தவறு என மத்திய அரசை அவர் மறைமுகமாக குற்றம்சாட்டினார். உரையில் அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இனி பருவமழையும் தொடங்க உள்ளது. எனவே மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

திடீரென ஊரடங்கை அமல்படுத்தியது தவறு. அதேபோல ஊரடங்கை ஒரே நேரத்தில் திரும்ப பெறுவதும் தவறாகி விடும். தற்போது உள்ள சூழலில் மராட்டிய மக்களுக்கு இது ஒரு இரட்டை பிரச்சினையாக மாறிவிடும்.

தற்போதைய பிரச்சினையில் மத்திய அரசு செய்யும் உதவி சிறிதளவில் இருந்தாலும், நான் எந்த அரசியலிலும் ஈடுபட மாட்டேன். மராட்டியத்துக்கு இன்னும் ஜி.எஸ்.டி. தொகை கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரெயில் டிக்கெட் செலவுக்கான மத்திய அரசின் பங்கும் இன்னும் பெறவில்லை. இங்கு இன்னும் சில மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்