மின்சார வயர் மீது உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது

சிவகங்கையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது.

Update: 2020-05-25 01:48 GMT
வேடசந்தூர், 

சிவகங்கையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பண்ணைப்பட்டி பகுதிக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. லாரியை, திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பொன்ராஜ் (வயது 51) என்பவர் ஓட்டினார். அவருடன் சித்தரெங்கன் (50) என்பவரும் வந்தார். எரியோட்டில் இருந்து பண்ணைப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அருகே அந்த லாரி வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே சென்ற மின்சார வயரில் லாரியின் மேற்பகுதி உரசியதில் வைக்கோலில் தீப்பிடித்தது. இதனையறிந்த டிரைவர் பொன்ராஜ் சாலையோரத்தில் உள்ள வயல் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதேபோல் சித்தரெங்கனும் கீழே இறங்கி உயிர் தப்பினார். வைக்கோலில் பற்றிய தீ சிறிதுநேரத்தில் லாரியில் மளமளவென பரவியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்