சேலம் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதான கிருஷ்ணகிரி கைதி திடீர் சாவு

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைதி திடீரென இறந்தார்.

Update: 2020-05-25 03:05 GMT
சேலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜர் நகர் காலனியை சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சூளகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். 97 நாட்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இவர் கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு சரிவர ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூளகிரி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராம்ராஜ், மத்திய சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைதி ராம்ராஜிக்கு நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிறையில் உள்ள டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கைதி ராம்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சேலம் சங்கர் நகரை சேர்ந்த செல்வம் (30) என்பவர் கடந்த 22-ந் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்