விவசாயியிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.1 லட்சம் அபேஸ்

திருக்கோவிலூர் அருகே விவசாயியிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.

Update: 2020-05-25 04:49 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரஜினி (வயது 38), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக, மணலூர்பேட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தெரியாததால், யாராவது வருகிறார்களா என அவர் காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குழந்தைஏசு என்பவர், ரஜினியிடம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தான் பணம் எடுத்து தருவதாக கூறினார். இதை நம்பிய அவர், தனது ஏ.டி.எம். கார்டை குழந்தை ஏசுவிடம் கொடுத்தார். கார்டை பெற்றுக்கொண்ட அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து 500 ரூபாயை எடுத்து ரஜினியிடம் கொடுத்தார்.

பின்னர் ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு ரஜினி வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே அந்த ஏ.டி.எம். கார்டை பார்த்த போது, அது தன்னுடைய கார்டு இல்லை என்பது ரஜினிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என பார்த்தார்.

அப்போது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்துக்கு வந்த குழந்தை ஏசு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து, கார்டை மாற்றிக்கொடுத்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரஜினி மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து குழந்தை ஏசுவை கைது செய்தார்.

மேலும் செய்திகள்