கொரோனா பாதிப்பில் குணமடைந்து அலுவலகம் திரும்பிய துணை கமிஷனருக்கு உற்சாக வரவேற்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த துணை கமிஷனர் முத்துசாமி நேற்று அலுவலகம் திரும்பினார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-05-26 00:00 GMT
சென்னை,

சென்னை மக்களை கலங்க வைக்கும் கொரோனா, காவல்துறையையும் விட்டு வைக்கவில்லை. சென்னை போலீசில் கூடுதல் கமிஷனர் மற்றும் 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட 262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முறையான மருத்துவ சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். பூரண குணம் பெற்றவர்கள் அலுவலகம் திரும்பி மீண்டும் பணியிலும் சேருகிறார்கள்.

அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டில் அவர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் பூரண குணம் அடைந்துவிட்டார். டாக்டர்கள் ஆலோசனையின்படி அவர் நேற்று தனது அலுவலகத்திற்கு பணிக்கு திரும்பினார்.

அவருடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது கார் டிரைவர் மற்றும் பாதுகாவல் போலீஸ்காரர் ஆகியோரும் பூரண குணம் பெற்று நேற்று பணிக்கு வந்தார்கள். துணை கமிஷனர் முத்துசாமி மற்றும் அவரோடு பணிக்கு திரும்பிய கார் டிரைவர் மற்றும் பாதுகாவல் போலீஸ்காரர் ஆகியோருக்கு போலீஸ் பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூடுதல் கமிஷனர்கள் பிரேம்ஆனந்த்சின்கா, ஜெயராம், இணை கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் பகலவன், திருநாவுக்கரசு, டாக்டர் சுதாகர், ராஜேந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் திரளாக நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்