மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; நாராயணசாமியிடம், வியாபாரிகள் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-25 22:35 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நேரு வீதி வியாபாரிகள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் வறுமையில் வாடி வருகிறார்கள். குடும்பத்தை நடத்த முடியாமல் பசியும், பட்டினியாக தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வரும் 1-ந் தேதி முதல் மின் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வருவது மேலும் சிரமங்களை அதிகரிக்கும். புதுவையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த அசாதாரண சூழ் நிலையில் வர்த்தக நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகின்றன. இந்தநிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது மிகப்பெரிய சுமையாகும். உயர் மின் அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் திருமண நிலையங்கள், ஓட்டல்கள் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்கள் 50 நாட்கள் மேலாகியும் வழக்கம்போல் செயல்பட அனுமதியில்லை. வருமானம் சிறிதும் இல்லாத இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே ஏழை மக்களின் துயர் துடைத்து வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருந்து மக்கள் நலன் காக்கும் விதமாக இந்த புதிய மின் கட்டண உயர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்