இரையுமன்துறையில் பரிதாபம் கடலில் மூழ்கி மீனவர் பலி மீன் பிடித்து விட்டு திரும்பிய போது ராட்சத அலையில் சிக்கினார்

இரையுமன்துறையில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது கடலில் மூழ்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-05-26 00:39 GMT
குளச்சல், 

இரையுமன்துறையில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது கடலில் மூழ்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மீனவர்

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பாத் (வயது 56), மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த இருதய தாசன், ஆன்டனி ஆகியோரும் நேற்று அதிகாலையில் இரையுமன்துறை பகுதியில் இருந்து வள்ளத்தில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். காலை 9.30 மணியளவில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

கரையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த போது, ஜோசப் பாத்தும், இருதயதாசனும் வள்ளத்தில் இருந்து கடலுக்குள் குதித்து கரையை நோக்கி நீந்த தொடங்கினர். வள்ளத்தை ஆன்டனி ஓட்டி வந்தார்.

கடலில் மூழ்கினார்

அப்போது, ஜோசப் பாத் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினார். அவருடன் வந்த இருதய தாசன் அலையில் கரைக்கு இழுத்து செல்லப்பட் டார். இதை பார்த்த கரையில் நின்ற சக மீனவர்கள் கடலுக்குள் குதித்து ஜோசப் பாத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த ஜோசப் பாத்துக்கு தெரசம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்