கொளத்தூர் அருகே கள்ளக்காதலி எரித்துக்கொலை ; ரவுடி கைது

கொளத்தூர் அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2020-05-26 02:52 GMT

கொளத்தூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி மசக்காளிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). மேட்டூரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவருக்கும், கொளத்தூரை அடுத்த அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த கணவனை இழந்து வாழ்ந்து வந்த பார்வதி (35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். இதற்கிடையே நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து பார்வதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பார்வதி சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பார்வதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். கைதான செந்தில்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமையல் வேலைக்கு அய்யம்புதூர் பகுதிக்கு சென்றபோது பார்வதிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம். இந்த நிலையில் பார்வதிக்கு வேறு சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் அவரிடம் கேட்டேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நான் மண்எண்ணெயை பார்வதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி சின்னமேட்டூர் பகுதியில் நின்றிருந்த என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதான செந்தில்குமார் மீது நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், இவர் பிரபல ரவுடியாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. பெண்ணை எரித்துக்கொன்ற சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்