திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-27 00:08 GMT
திருவண்ணாமலை,

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளன. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது. எனினும், கோவிலில் தினசரி 6 கால பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது.

தற்போது ஊரடங்கில் தமிழக அரசு பல தளர்வை அளித்து வணிக நிறுவனங்கள், தொழிச்சாலைகள் மற்றும் அரசு மதுபானக்கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு தேங்காய் உடைத்து, பழம் வைத்து, கற்பூரம் ஏற்றி, தோப்புக்கரணம் போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அருண், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் நிர்வாகிகள் துரைராஜ், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் கோவிலில் உள்ள திருமஞ்சன கோபுரம், பே கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகியவற்றின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கோவில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

சேத்துப்பட்டுவை அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம் நடந்தது. 144 தடை உத்தரவால் கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தேவிகாபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் இந்து முன்னணியினர் கோவில்களை உடனே திறந்து, பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க கோரி, தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்