ஊரடங்கால் அடைக்கப்பட்ட பர்மா பஜார் கடைகள் திறப்பு

ஊரடங்கால் அடைக்கப்பட்ட பர்மா பஜார் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

Update: 2020-05-27 23:15 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும், சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜார் கடைகளை திறக்க கடந்த 2 மாத காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பர்மா பஜார் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கத்தின் பொதுச்செயலாளர் அமீர் அம்சா கூறியதாவது:-

பர்மா பஜாரில் 867 கடைகள் உள்ளன. 2 மாதங்களாக கடைகள் திறக்கப்படாத நிலையில் 3 கடைகளில் திருட்டு போய் இருந்தது. பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ரம்ஜான் பண்டிகை அன்று கடைகளை திறக்க அனுமதி அளித்தார்கள். ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை வரிசையில் கடைகளை திறக்க அனுமதி அளித்தார்கள். அதன்படி கடந்த 2 நாட்களாக கடைகளை திறந்தோம். மீண்டும் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கூறும் அறிவுரைகளை முழுமையாக ஏற்று இன்னும் ஒரு வார காலத்துக்குள் முழுமையாக கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்